மாயாண்டி சுவாமிகள்
குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என்பார்கள்.
ஆனால், நம் பாரத தேசத்தைப் பொறுத்தவரை குமரன் மட்டுமல்ல…
குறைவில்லா அருளை வழங்கக்கூடிய சித்தர்களும் இருப்பார்கள் என்பது நிதர்சனம்.
இதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தில் உள்ள எண்ணற்ற மலைகளைச் சொல்லலாம்.
காலாங்கிநாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர் இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களோடு சம்பந்தப்பட்டது சதுரகிரி.
பாம்பாட்டிச் சித்தர் தவம் இருந்து ஸித்துக்கள் புரிந்த இடம் மருதமலை.
பின்னாக்குச் சித்தர் வசித்த பேறு பெற்றது சென்னிமலை.
சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற எண்ணற்ற தவசீலர்கள் வாழ்ந்து,
இறையருள் பெருகிய பூமி திருவண்ணாமலை.
ஆதிசங்கரர், மகா அவதார் பாபாஜி போன்ற எண்ணற்ற மகா புருஷர்கள் உலவிச் சிறப்பித்த பிரதேசம் இமயமலை.
தவிர வெள்ளியங்கரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற எண்ணற்ற மலைகள் எல்லாம்
சித்தர்கள் அருள் நிரம்பிய சிலிர்க்க வைக்கும் சாகசச்சிகரங்கள்!
தெய்வங்களும் சித்தர்களும் மலைகளை தேடி செல்வது வெறும் தனிமை வேண்டி மட்டும் அல்ல
இதில் ஒரு மிகப்பெரிய ரகசியம் அடங்கியுள்ளது.
எந்த சித்தர் எந்த மலையில் குகையில் வசித்தரோ
அவர் இந்த பூமியை விட்டு புறப்படும் போது தன்னுடைய சக்தி முழுவதையும்
அங்கிருக்கும் பாறைகளில் பதித்துவிட்டு செல்வர்
ஒன்று அவர் மறுபடி பிறவிடுத்துவந்து அந்த சக்திகளை தானே எடுத்துக்கொள்வார்
அல்லது தான் இருப்பிடத்தை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த சக்தி உதவும் வகையில் பிரதிஷ்டை செய்துவிட்டு செல்வர்
இதன் காரணமாகத்தான் மலை அனைத்தும் மிகுந்த சக்தி வாய்ந்த மையங்களாக நம் மண்ணில் விளங்குகின்றது
இப்படி ஒரு சக்தி வாய்ந்த மலையோடு தொடர்புடைய சித்தர் தான் சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகள்
ஆம் அவர் வாழ்ந்த மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு.
திருப்ரன் குன்றம் மலையே லிங்கமாக வணங்கப்படுகிறது
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு
முருகன் தெய்வானை திருமணம நடந்த வீடு என்ற பல பெருமைகளை கொண்ட இந்த மலைக்கு மிக அருகில் தான்
பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும் காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின்
பெரியரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது.
ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் திருக்கூடல்மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள்.
இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும்,
மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன.
தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.
இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்,
இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார்.
பல ஆண்டுகள் பல சித்துக்கள் புரிந்து இந்த மலைபகுதியில் தன் சக்தியை வைத்துவிட்டு சமாதியும் அடைந்துள்ளர்.
மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி.
இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம்.
அந்தக் காலத்தில்- அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில்
நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன.
உணவருந்தவும் ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரிகர்களும் பயன்படுத்தி வந்தனர்.
கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர்.
இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது.
இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
கட்டிக்குளத்தில் குப்பமுத்து – கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர்.
உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து.
சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர்.
அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர்.
ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால்,
கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது.
அந்த மகவுக்கு மாயாண்டி எனப் பெயரிட்டனர்.
இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு.
பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.
தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம்.
அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்துவிட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து.
ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்துவிட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார்.
அவர் கண்ட காட்சி பதற வைத்தது.
குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே
நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது.
அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன.
கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில்,
ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து.
பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார்.
என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம்.
தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி.
மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து,
இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி,
மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.
பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிடகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி.
தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் பார்த்தார்.
வியந்தார்.
அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும் அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி.
இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி,
இவருக்கு மனைவியாக வாய்த்தாள்.
மாயாண்டி சாமிகளுக்கு இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு.
ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால்,
மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார்.
மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவர் மனைவி.
தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.
மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?!
இல்லறத்திலேயே இவர் இருந்து விட்டால்,
எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்?
மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டார்.
விளைவு- இல்லறம் இனிக்கவில்லை.
தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார்.
சிட்டாய்ப் பறக்க விரும்பினார்.
தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார்.
அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே!
உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே!
இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.
இவர் சூட்டுக்கோல் இராமலிங்க சாமிகளின் நேரடி சிஷ்யர்.
இராமலிங்க சாமிகள் காலத்திற்கு பிறகு அவரின் கூட்டுக்கோல் செல்லப்பா சுவாமிகளிடம் தான் இருந்தது.
செல்லப்பா சாமிகளை சந்தித்து, தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் மாயாண்டி
செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார்.
துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகிவிட்டது.
ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே!
துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை
எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும் மனைவியும்.
ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை.
தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
சித்தமெல்லாம் சிவ மயம்!
கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம் ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார்.
ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார்.
உத்திர கோசமங்கைக்கு அருகில் தான் செல்லப்பா சுவாககளின் ஜீவசமாதி கோவில் அமைந்துள்ளது.
இறுதியாக மதுரை மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர்.
அருகில் இருந்த திருக்கூடல்மலையை பார்த்தவுடன் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.
அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர்.
சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள்
மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார்.
தரிசனம் செய்தார்.
அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார்.
ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார்.
மண் எடுத்தார்.
அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து,
காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.
காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது.
மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின.
மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்- க. இருளப்ப கோனார்.
ஒரு நேரம் இருளப்ப கோனாருக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகவும்
அவரது வாழ்வு இருபத்தாறு வயதுக்குள் முடிந்துவிடும் என்றும்
சில ஜோசியர்கள் அவரிடம் சொல்லி இருந்தார்கள்.
இதைக் கேட்டு மனக்கவலையில் இருந்த காலத்தில்தான்
ஒரு நாள் கீழப்பூங்குடி மிளகாய்ச் சித்தர் என்கிற ஞானியைச் சந்தித்தார்.
இருளப்பா… திரிகால ஞானி ஒருவர் மதுரைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி என்பது அவர் பெயர்.
ஆரப்பாளையம், கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம், கூடல்மலை போன்ற பகுதிகள்தான் அவரது நித்திய வாசம். அவரைத் தேடிப் போய் தரிசனம் செய்.
உன் வாழ்க்கை சிறக்கும்? என்று சொல்லிப் போனார்.
இதற்கு இவருக்கு உதவியவர்- மூக்கையா சுவாமிகள்.
இவர் இருளப்ப கோனாரின் உறவினரும்கூட.
மூக்கையா சுவாமிகளுடன் போய் மாயாண்டி சுவாமிகளை கோரிப்பாளையத்தில் சந்தித்தார் இருளப்ப கோனார்.
திரளான பக்தர்கள் கூடி இருந்த அந்த மடத்தின் சூழ்நிலையைப் பார்த்ததும், மெய் மறந்தார் இருளப்ப கோனார்.
மாயாண்டி சுவாமிகளின் திருவடிகளில் தன்னை சமர்ப்பித்தார்.
மணக்கும் மலர் மாலைகள் மலைபோல் குவிந்து கிடக்க, அவற்றின் இடையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார் சுவாமிகள்.
மாயாண்டி சுவாமிகள் திடீரென இருளப்ப கோனாரைப் அழைத்து பேசினார்
அவரின் விதி முடிவடையும் நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து
அவரை கட்டிக்குளத்துக்கு மேற்கே கருப்பனேந்தலில் தான் உருவாக்கிய தியான மடத்துக்கு இருளப்ப கோனாரை அழைத்துச் சென்றார் மாயாண்டி சுவாமிகள்.
ஒரு மண்டல காலம் இருவரும் அங்கேயே தங்கினார்கள்.
விதிப்படி இருளப்ப கோனார் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளை சுவாமிகளே அனுபவித்தார்.
ஒரு நாள் முழுதும் மூடிய குழிக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து கடும் நிஷ்டையில் அமர்ந்தார்.
எவரையும் தன் அருகில் வர அனுமதிக்கவில்லை.
மறுநாள் காலை குழிக்குள் இருந்து வெளியே வந்த மாயாண்டி சுவாமிகள், இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொன்னார்.
இனிமே ஒனக்குப் பிரச்னை இல்லை.
ஆயுள் பலம் கூடிடுச்சு. தயங்காம ஆன்மிகப் பணி செய்.
என்றுள்ளார்
தன் உடலில் ஏதோ புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார் இருளப்ப கோனார்.
ஆம்! இனி, அவரது புதுப் பிறவி அந்த நிமிடத்தில் இருந்து துவங்கியது.
தன் வாழ்நாளையே நீட்டித்துத் தந்த மாயாண்டி சுவாமிகளுக்குத் தன்னையே என்றென்றும் அர்ப்பணிக்க வேண்டும் என்கிற நன்றிக் கடனால்,
சுவாமிகளின் இறுதிக் காலம் அவரை விட்டு நீங்காமல் இருந்தார் இருளப்ப கோனார்.
தனது ஆன்மிகப் பணிகள் இனிதாகத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தவர்
தனக்கான குருவை தேடிக் கொண்டிருந்தார்.
மிளகாய்ச் சாமியார் சொன்னதன்படி மாயாண்டி சுவாமிகளைத் தரிசித்து,
அவரையே தன் குருவாக ஏற்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டார் இருளப்ப கோனார்.
இருளப்ப கோனாரை ஆசிர்வதித்து, தன் அருட் பணிகளில் இணைத்துக் கொண்டார் மாயாண்டி சுவாமிகள்.
இருளப்ப கோனார் தன் காலத்தில் திரட்டிய செல்வத்தைக் கொண்டு திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் நிறைய இடங்களை வாங்கி,
மாயாண்டி சுவாமிகளின் அறிவுரைப்படி ஆன்மிகம் மற்றும் அறப் பணிகளைப் பிற்காலத்தில் நடத்தலானார்.
1904-1905-களில்.மாயாண்டி சுவாமிகள் வெளி உலகுக்குத் தெரிய வந்த காலத்தில் கோரிப்பாளையத்தில்
சின்னதாக ஒரு மடம் அமைத்து அங்கு தங்கி இருந்தார்
வைகைப் பாலத்துக்கு அருகே (அப்போதே இந்தப் பாலம் இருந்தது) இந்த மடம் அமைந்திருந்தது.
அவ்வழியாக பயனித்த ஒரு ஆங்கிலேய பிரபு
சாமிகளை சந்தித்து அவரின் சக்தியை புரிந்துகொண்ட
அதுவரை முறையான பட்டா இல்லாமல் அங்கே நடந்து வந்த மடத்துக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் தந்தார்
இதன் பிறகு காகபுசுண்டர் மலையில் மாயாண்டி சுவாமிகள் பெரிய அளவில் ஆன்மிகப் பணிகளைத் துவக்கியபோது அந்த ஆங்கிலேய பிரபுவே பல சந்தர்ப்பங்களில் நேரில் வந்து உதவி இருக்கிறாராம்.
இந்த ஆங்கிலேய பிரபு என்றில்லை.
பல ஆங்கிலேய அதிகாரிகள் சுவாமிகளின் அனுக்ரஹத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.
சுவாமிகளின் மகத்துவம் அறியாமல் அவரை அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கிய சில வெள்ளைக்கார அதிகாரிகள்கூட,
இவரது ஸித்த வேலைகளைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். அருளாசியும் பெற்றிருக்கிறார்கள்.
மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.
மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் ராமசாமி என்கிற அந்தணர் தன் இல்லாளுடன் வசித்து வந்தார்.
இந்தத் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள்.
ஒரு நாள் இவர்கள் இல்லத்துக்கு எழுந்தருளினார் மாயாண்டி சுவாமிகள்.
தம்பதியரை ஆசிர்வதித்து, உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறப்பான்.
உலகம் மேன்மை அடைவதற்கு வேள்விகள் செய்வான்.
மாதா புவனேஸ்வரியின் அருளைப் பூரணமாகப் பெறுவான் அவன். சிறு பிராயம் வரை அவன் உங்களிடம் இருப்பான்.
பிறகு அவன் இந்த உலகத்துக்கே சொந்தம் ஆவான்.
அவனுக்கு சுப்ரமணியம் என்று பெயர் வை என்று சொல்லிப் போனார்.
அதன்படி ராமசாமி தம்பதிக்குப் பத்தாவது பிள்ளையாகப் பிறந்த சுப்ரமணியனே,
ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆனார்.
மாயாண்டி சுவாமிகளின் திருவாக்குப்படி மாதா புவனேஸ்வரியின் அருளுக்குப் பாத்திரமானார்.
சேலம், புதுக்கோட்டை, சென்னை சேலையூர் போன்ற இடங்களில் ஸ்கந்தாஸ்ரம் அமைத்து,
மாபெரும் வேள்விகள் நடத்தி, ஸித்தி ஆனதை பக்தர்கள் அறிவார்கள்.
காசு கொடுத்த இவன் பேச்சை உலகமே கேட்கும் என்று மாயாண்டி சுவாமிகளே ஆசிர்வதித்த சிறுவன்தான்,
பிற்காலத்தில் கிருபானந்த வாரியார் ஆனார்!
இந்த நன்றியை மறக்காத வாரியார் சுவாமிகள் 1987-ஆம் ஆண்டு நடந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்துகொண்டு,
அவரது சிறப்புகளைக் கூட்டத்தார் மத்தியில் சிலாகித்துப் பேசினார்.
1928-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 6-ம் தேதி இருளப்ப கோனார் உட்பட தன் பக்தர்களிடம்
தன்னுடைய ஸ்தூல உடலுக்கான நேரம் இந்த பூமியில் நிறைவடைய போவதாகவும்
தான் இன்னும் சில மாதங்களில் சமாதி அடைய போவதாக தெரிவித்து
தன் ஸ்தூல உடல் மறைந்தாலும்
தன் சூட்சும சரீரத்தோடு மேலும் பல ஆண்டுகள் இந்த மலையில் வசிக்கப்போவதாகவும் தெரிவித்தவர்
அதன்படி, 1930-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து,
தன் ஸ்தால உடலில் இருந்து வெளியேறினார்.
திருக்கூடல் மலை அடிவாரத்தில் மாயாண்டி சாமிகளில் திருவுடல் திருசமாதி படுத்தப்பட்டது.
அவரின் பரமகுருவிடம் இருந்து குருவிடம் வந்து பின் தன்னிடம் இருந்த
மாயாண்டி சாமிகளின் சமாதி கோவிலில் ஒரு தனித்துவம் உள்ளது
பொதுவாக அடக்கம் செய்யப்படும் யோகிகளில் சமாதிக்கு மேல்
சிவலிங்கமே மரதிஷ்டை என்பபடும்
ஆனால் சாமிகளின் சமாதிக்கு மேல் விநாயார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளர்.
மாயாண்டி சாமிகள் காலத்திற்கு பிறகு இருளப்ப கோனர்.
சாமிகளின் விருப்பப்படி பல திருப்பனிகளை செய்தார்.
மாயான் டி சாமிகள் எப்போதும் திருக்கூடல் மலையை பழநிக்கு நிகரான மலை என்று கூறுவார்.
மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணியும் (1909-ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக தினத்தன்று) பிரதிஷ்டை ஆனார்கள்.
தவிர இந்த மலையில் குடிகொண்ட உத்ஸவர் ஸ்ரீநவநீதப் பெருமாள் ஆடிப்பௌர்ணமியை ஒட்டி, வருடா வருடம் மானாமதுரை வரை வலம் செல்வார்.
சுமார் 250 கிராம மக்கள் இந்த தரிசனத்தில் திளைப்பார்கள். சுவாமிகளின் சூட்டுக்கோலும் ஜோதியுடன் இந்த யாத்திரையில் செல்லும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் தங்கி, கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்படும். இந்த வைபவம் தென்மாவட்ட மக்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம்.
தகவல் : மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும். இங்கு தான் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.





