திருச்செந்தூர் சுவாமிமலை
முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை மற்றொன்று திருச்செந்தூர்.
இவ்விரண்டு தலங்களிலுமே பிரதிஷ்டை ஆகியுள்ள முருக விக்ரகங்கள் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்த வல்லவை.
இதில் கடற்கரையில் அமைந்திருக்கும் திருச்செந்தூர் அந்த கடலை போலவே தன் சக்தியை ஆக்ரோசமாக வெளிப்படுத்துக் தன்மையில் உள்ளது.
அதே சமயம் கட்டுமலையில் அமைந்திருக்கும் சுவாமிமலை பாறையை போல சலனமில்லாமல் தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் அங்கே செயல்படும் முருக சக்திதான்.
திருச்செந்தூர் தீவிர சக்தியோடு விளங்க காரணம் , அங்கு நடந்த அசுர வதம்
மேலும் முருகன் அவதாரத்தின் நோக்கம் நிறைவேற்று பட்ட இடம் திருச்செந்தூர் அதனால் தான் அதன் சக்தியும் தீவிர நிலையில் உள்ளது.
அதே சமயம் சுவாமிமலை முருகன் குருவாக அமர்ந்து குருவிற்கெல்லாம் குருவான சிவபெருமானுக்கு உபதேசம் செய்த இடம்.
குரு என்றாலே தட்சிணாமூர்த்தியை குறிக்கும், அவருக்கு மௌன சாமி என்ற திருப்பெயரும் உண்டு
முருகன் மௌனமாய் தன் ஆற்றலை வெளிப்படுத்திகொண்டுள்ள தலம் தான் சுவாமிமலை.
ஒரு மனிதனுக்கு ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களை போக்கும் பரிகார தலங்களாக திருச்செந்தூரும் ஸ்வாமிமலையிம் விளங்குகின்றது.
அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப
இங்கே வழிபட வரும் பக்தர்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.
அதன் வெளிப்பாடு திருச்செந்தூரில் அதிகமாக தெரிகிறது ஸ்வாமிமலையில் அது சூட்சுமமாக உள்ளது
கந்தக் கடவுளுக்கு உண்டான ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அமைந்திருப்பது ஒரு கடற்கரையில் .
பொதுவாக மலையில் வீற்றிருக்கும் முருகர் இங்கே கடற்கரையில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு
சங்க இலக்கியங்களான புறநானூறு சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் திருச்செந்தூர் குறிப்பிடப்பட்டுள்ளதை
பார்க்கும் போது இன்று நேற்றல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருச்செந்தார் புகழ்பெற்று விளங்கியுள்ளது.
கடல் அலைகள் வருடுவதால் `திருச்சீரலைவாய்’ என்றும்,
முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால் `ஜயந்திபுரம்’ என்றும்
இவ்வூரைப் போற்றுகின்றன புராணங்கள்.
மட்டுமன்றி கபாடபுரம், கந்தமாதன மலை, திருச்செந்தில் என்ற வேறு பெயர்களும் உண்டு
ஆதி சங்கரர் திருசெந்தூர் முருகன் மீது அதிக பக்தி கொண்டவர்.
தீய சக்திகளினால் நோய் வாய் பெற்ற சங்கரர் நினைத்திருந்தால் அவரது யோக சக்தியினால் தன்னைத் தானே
குணமடைய பெற்றிருக்க முடியும்
ஆனால் அவர் திருச்செந்தூர் முருகனை நாடி வந்தார் முருகனின் மனம் குளிர அவரை துதித்து பாடினார்
அதுவே சுப்பிரமணிய புஜங்கம்
சுப்ரமணிய புஜங்கத்தில் வரும் ஒவ்வொரு பாடலையும் மிக நுணுக்கமாக ஆழ்ந்த கவனித்தால் ஆதிசங்கர திருச்செந்தூர் முருகனை எவ்வாறு அன்போடு புகழ்ந்து பாடியுள்ளார் என்பது புரியவரும்
இன்றைக்கும் பக்தர்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்
ஆதிசங்கரரின் சுப்ரமன்ய புஜங்கத்தை முழு அர்பனிப்போடு ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் அந்நோயில் இருந்து முழுவதுமாக குணமடையாலம் என்பது பக்கர்களின் அனுபவ உண்மை
திருச்செந்தூர் சிறப்புடன் விளங்க முக்கிய காரணம் முருக அவதாரத்தின் நோக்கம் நிறைவேற்றபட்ட புண்ணிய பூமி இது.
ஆம் முருக அவதாரத்தின் நோக்கமே அசுர வதம் தான்.
வேதங்களில் கரை கண்டவன்;
காசியப முனிவரின் மகன் எனும் பெருமை பெற்றவன்;
கற்புக்கரசியான பதுமகோமளையின் கணவன்;
‘எம் சக்தியைத் தவிர மற்றெந்த சக்தியாலும் உனக்கு மரணம் கிடையாது!’ என்று கயிலாய நாதனிடம் வரம்பெற்றவன்.
இவ்வளவு பெருமை களும் ஒருங்கே கொண்டவன் சூரபத்மன்.
இப்படி சிவனிடமே வரம் வாங்கிய ஆணவத்தால், ‘வான் சுமந்த தேவர்களை மீன் சுமக்க வைத்தான்’ என்பார் வாரியார் ஸ்வாமிகள்.
அப்படிபட்ட மாபெரும் அசுர குலத்தை முருக கடவுள் தன் தாயிடம் பெற்ற சக்தி வேலினால் வதம் செய்த இடம் இதனால் இயல்பாகவே திருச்செந்துள் அதிக அளவில் முருகர் சக்தி கொண்ட இடம் என்பதில் சந்தேமில்லை.
இந்த பகுதியில் பல சித்தர்களின் ஜிவசமாதி அமைந்திருப்பது தான் இந்த கோவிலின் ஆற்றலை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறது.
கடற்கரை மட்டமும் இக்கோயில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மட்டமும் ஒரே அளவாக இருந்தாலும், கடல் நீர் இக்கோயிலின் உள்ளே புகாதவாறு ஞான நுட்பத்துடன் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் திருப்பணியை செய்தவர்களில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி, ஆறுமுகசாமி, வள்ளிநாயகம் சாமி ஆகிய ஐந்து சித்தர்களின் பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளும் திருக்கோயிலின் உள் பிராகாரத்தில் குரு பகவான் சன்னிதிக்கு எதிரே மூன்று தூண்களில் நின்ற கோலத்தில் சிலை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.
ஜீவசமாதி அடைந்த இம்மூவர் சமாதி திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக் கிணறு அருகிலும்
கோயில் ராஜகோபுரம் வடக்கு டோல்கேட் அருகே வள்ளி நாயகம் சுவாமிக்கும் ஜீவசமாதி உள்ளது.
ராஜகோபுரம் திருப்பணி செய்த ஸ்ரீ தேசிக மூர்த்தி சுவாமி ஜீவசமாதி ஸ்ரீ வைகுண்டத்திற்கு அருகே உள்ள ஆழ்வார்தோப்பில் அமைந்துள்ளது.
கோர்ட் சுவாமிகள் என்ற சத்ரு சம்ஹார மூர்த்தி அவாமிகளின் திருசமாதியும் திருச்செந்தூரில் தான் அமைந்துள்ளது.
வாட்டமுற்ற தேவர்களின் மனத் துயரத்தை ஆதியோடு அந்தம் (முழுவதும்) விண்ணப்பித்து,
அவர்களின் துயர் நீக்கும்படி தேவகுருவான வியாழ பகவான் முருகப் பெருமானை பிரார்த்தித்த திருத்தலம்.
ஆகவே, குரு பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
சூரனை வென்றபிறகு, முருகப்பெருமான், தானே தன் திருக்கரங்களால் ஐந்து சிவலிங்கங்களை வைத்துப் பூஜை செய்த திருத்தலம்.
அந்தச் சிவலிங்கங்களை, இன்றும் நாம் திருச்செந்தூரில் தரிசிக்கலாம். முருகன் சந்நிதிக்கு இடப்புறம் ஒரு சிறிய குகையில் உள்ளது.
புராணக் காலத்தில் மட்டுமல்ல, நமது காலத்திலும் திருச்செந்தூரில் முருகன் வெளிப்படுத்திய மகிமைகள் ஏராளம்.
பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி.
மதுரை, நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட காலம்.
அப்போது டச்சு கொள்ளையர்கள் திருச்செந்தூர் கோயிலில் புகுந்தார்கள்.
அங்கிருந்த பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட முருகனின் விக்கிரகத்தைப் பார்த்தார்கள்.
இந்த விக்கிரகத்தை ‘ஆறுமுக நயினார்’ என்பர்.
ஒளி விட்டுப் பிரகாசித்த அதை, தங்கம் என எண்ணிக் கொள்ளை அடித்துச் சென்றார்கள்.
பலம் வாய்ந்த கடற்படை இல்லாததால் நாயக்க மன்னர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை.
பக்தர்களோ துயரத்தில் தவித்தார்கள்.
கடலில் டச்சுக்காரர்களின் கப்பல் பயணித்தது.
சற்று தூரம் போவதற்குள்ளாக ஆறுமுகநயினார் ஆவேசத்தைக் காட்டத் தொடங்கினார்.
கடல் கொந்தளித்தது; கப்பல் தத்தளித்தது. ‘வைக்கக் கூடாத இடத்தில் கை வைத்து விட்டோம்!’ என்று பயந்த டச்சுக்காரர்கள்,
ஆறுமுக நயினார் விக்கிரகத்தை எடுத்துக் கடலில் எறிந்தார் கள்.
கடல் அடங்கி அமைதியானது. கப்பல் பிழைத்தது.
இந்த அற்புத நிகழ்ச்சி கி.பி. 1648-ல் நடந்தது.
இதைச் சொன்னவர் ஒரு டச்சுக்கார மாலுமியே.
எம்.ரென்னல் என்ற பிரெஞ்சு ஆசிரியர் எழுதி,
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து 1785-ல் வெளியான ‘சரித்திர இந்தியா’ என்ற நூலில் இந்தத் தகவல் உள்ளது.
ஐந்து ஆண்டுகள் ஆயின.
திருச்செந்தூர் கோயிலில் ஆறுமுக நயினார் விக்கிரகம் இல்லாதது, திருமலை நாயக்கரின் காரியஸ்தரான வடமலையப்ப பிள்ளைக்கு வருத்தம் அளித்தது.
அவர் வேறு விக்கிரகம் செய்ய முயன்றார்.
அவரது கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றினார்.
‘அன்பனே! நான் கடலுக்குள் இருக்கிறேன்.
நீ கடலில் சிறிது தூரம் பயணித்தால், ஓர் இடத்தில் எலுமிச்சம் பழம் மிதக்கும்.
அதற்கு மேலே ஆகாயத்தில் ஒரு கருடன் வட்டம் இடும்.
அந்த இடத்தில் நீ தண்ணீரில் இறங்கு! நான் கடலின் அடியில் இருந்து எழுந்து மேலெழும்பி உன் கையில் அகப்படுவேன்!’ என்றார்.
கனவு கலைந்தது.
ஆறுமுகக் கடவுள் ஆணை யிட்டபடியே, வட மலையப்பபிள்ளை, சிலருடன் படகில் போய்க் குறிப்பிட்ட இடத்தில் கடலில் தேடினர் .
வியக்கும்படியாக oru nataraja vikragamum ஆறுமுக நயினாரின் விக்கிரகம் அகப்பட்டது.
ஆறுமுக நயினாரின் அந்த அருள் வடிவம் 1653-ஆம் ஆண்டில், மறுபடியும் கோயிலில் சேர்க்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை.
முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான்.
உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்!
அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான்.
முருகனருள் தடுத்து நிறுத் தியது.
இறை ஆணைப்படி செவலூர் சாஸ்திரிகளைச் சந்தித்தான்.
அவரின் ஆசி யோடும் வழிகாட்டலோடும் செந்தூர் தல புராணத்தை இயற்றினார் வென்றி மாலை.
கவிராயர் பட்டம் கிடைத்தது.
அந்தத் தலபுராணத்தை திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்த போது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார்.
எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர்.
அது ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது.
திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது!
ஆங்கிலேயர் காலத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது.
1803-ல் திருநெல்வேலியில் கலெக்ட ராக இருந்தார் லூஷிங்டன் துரை.
அவர் திருச்செந்தூரில் முகாமிட்டிருந்த நேரம்.
வசந்த மண்டபத்தில் ஆறுமுகக் கடவுளை எழுந்தருளச் செய்து, பக்தர்கள் விசிறிக் கொண்டிருந்தார்கள்.
லூஷிங்டன் துரைக்கு இகழ்ச்சி பிறந்தது.
‘‘என்ன? உங்கள் ஸ்வாமிக்கு வியர்க்கிறதோ?’’ என்று கிண்டலாகக் கேட்டார்.
‘‘ஆம்!’’ என பதில் வந்தது.
‘‘நிரூபித்துக் காட்டுங்கள்!’’ என்றார் லூஷிங்டன்.
இறைவன் மேல் இருந்த மலர் மாலைகளையெல்லாம் எடுத்து விட்டு,
ஒரு துணியை ஸ்வாமி மீது போர்த்தினார்கள் அர்ச்சகர்கள்.
கொஞ்ச நேரத்தில் துணி முழுவதும் நனைந்தது.
வியர்வை வழிந்தோட ஆரம்பித்தது. திகைப்படைந்த லூஷிங்டன் துரை, திருச்செந்தூர் இறைவனுக்கு ஏராளமான வெள்ளிப் பாத்திரங்களைக் காணிக்கையாகச் செலுத்தினாராம்!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு சுவாமிமலை.
சுவாமிமலை அமைந்திருப்பது ஒரு கட்டுமலையில்
கும்ப கோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது.
சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்று குறிப்பிடுகின்றன.
‘ஏர்’ என்றால் அழகு; ‘அகம்’ என்றால் வீடு என்பர்.
அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம்.
ஏர்த் தொழிலான விவசாயம் சிறக்கும் பகுதியில் உள்ள படைவீடு ஆதலால் திருவேரகம் ஆனது என்பாரும் உண்டு.
அடியவர்களின் மனதை ‘அருள்’ எனும் ஏர் கொண்டு உழுது, ‘அன்பு’ எனும் பயிரை வளர்ப்பவர் முருகப் பெருமான்.
இவர் அருள் பாலிக்கும் தலம் ஆதலால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.
சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்ததுடன் தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார்.
முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார்,
தம் உள்ளத்தில் உவகை பொங்கிட…
தன் மகனை ‘நீயே சுவாமி!’ என்று கூறினாராம்.
இதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது.
முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.
இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம்.
‘சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன்
தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!’ என்று கோபம் கொண்ட பார்வதிதேவி,
பூமா தேவியை சபித்துவிட்டார் .
சாப விமோ சனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள்.
பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி (தாத்ரி) மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.
கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும்,
மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர்.
ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு,
முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்ததாகச் சொல்கிறது தலபுராணம்.
யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்லவேண்டும்.
60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது.
இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது.
கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து… என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் முருகன்.
ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால்,
அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம்.
இது, ‘ஈசனே முருகன்; முருகனே ஈசன்!’ என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை (வாலிப) பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
இவருக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, சுவாமி, குருநாதன், புத்ரக குருக்கள் ஆகிய திருநாமங்களும் உண்டு.
வடமொழியில் ஞானஸ்கந்தன் என்பர். இவரின் கொடி- சேவற்கொடி; ஆயுதம்- வேல்; மாலை- நீபம்; வாகனம் யானை!
மூலவரை பூஜிக்கும்போது, ‘நமோ குமாராய நம’ என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது.
இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். இதை…
‘நாதாகுமரா நம’ என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா! குறமின் பதசேகரனே’ என்ற அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், விளக்குகிறது.
மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனி சிறப்பம்சம்…
இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி!
மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர்.
இரண்டு திருக்கரங்களை நீட்டியவாறும், மேலும் இரு கரங்கள் மேல் நோக்கி திகழ…
நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர்.
சிவபெருமான் ‘ஞானோபதேசம்’ பெற்ற திருத் தலம் ஆதலால் இங்கு ‘யக்ஞோபவீதம்’ நடத்துவது சிறப்பு என்கிறார்கள்.
ஸ்வாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர் ஆதலால்,
இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.
இதனால் முருகனருள் கைகூடி, விரைவில் அந்தத் தம்பதி ஞானமும் அழகும் கொண்ட பிள்ளையைப் பெறுவர் என்பது நம்பிக்கை!
தேவர்களுக்கு முனிவர்களுக்கும் வாழ்வு தந்த முருகன், நமக்கும் நல்வாழ்வு தரவும் நம் வினைகளைக் களையவும் கலியுக தெய்வமாய் கோயில் கொண்ட தலங்களான திருச்சந்தூரையும் சுவாமிமலையையும் தரிசபிப்போம் மறுகண் அருள் பெறுவோம்





