🧘 Siddhas & Yogis

சிவானந்த பரமஹம்சர்

பல யோகிகளின் வாழ்க்கை வரலாறுகள்…
இன்றுவரை முழுமையாக பதிவு செய்யப்படாமல்
காலத்தின் ஓட்டத்தில் மறைந்து போனதற்கு
பல காரணங்கள் இருந்தாலும்…
அதில் மிக ஆழமானதும், முக்கியமானதும் ஒன்று…
அப்படி பதிவு செய்யப்படுவதை
அந்த மகான்களே விரும்பவில்லை என்பதுதான்…

தங்களின் வாழ்க்கை…
தங்களின் ஞானம்…
தங்களின் ஆன்மீக அனுபவம்…
இவை எல்லாம்
யாரோ எழுதி வைத்த சொற்களாக
எங்கோ ஒரு நூலின் பக்கங்களில்
உறைந்து போக வேண்டியவை அல்ல…
அவை ஒவ்வொருவரும்
தங்களின் உள்ளத்தில் உணர்ந்து,
தங்களின் சொந்த தேடலின் வழியாக
கண்டடைய வேண்டிய உண்மைகள்
என்றே அவர்கள் நம்பினார்கள்…

ஞானம் என்பது
படித்து தெரிந்து கொள்வதற்கான
ஒரு அறிவுப் பொருள் அல்ல…
அது வாழ்ந்து, அனுபவித்து,
உள்ளுக்குள் உருகி
உணர வேண்டிய ஒரு நிலை…
இந்த உண்மையை
வார்த்தைகளால் அல்ல,
தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியாலும்
நடைமுறையாக நிரூபித்தவர்கள்
அந்த மகான்கள்…

அவர்களில் சிலர்
ஒரு படி மேலே சென்று…
தாம் வாழ்ந்த காலத்தில்,
தங்களை யாரும்
புகைப்படம் எடுக்கக்கூட
அனுமதிக்காத நிலைபாட்டை
எடுத்துக் கொண்டார்கள்…

இது அகம்பாவத்தின் வெளிப்பாடு அல்ல…
புகழ், பெயர், அடையாளம்,
வரலாற்றுப் பதிவு…
இவையெல்லாம்
ஞானத்தின் பயணத்தில்
ஒரு சுமையாக,
ஒரு தடையாக
மாறிவிடக் கூடாது என்ற
ஆழ்ந்த உள் விழிப்பின்
விளைவுதான் அது…

“இந்த உடல் மறைந்த பிறகும்…
என்னுடைய ஒரு சிறு தடயம்கூட
இந்த உலகில்
எஞ்சிக் கிடக்க வேண்டாம்…”
என்ற கடுமையான
ஆன்மீக உறுதியோடு
அவர்கள் இந்த வாழ்க்கையை
வாழ்ந்து கடந்தார்கள்…

அப்படிப்பட்ட
உயர்ந்த நிலைப்பாட்டோடு
வாழ்ந்து மறைந்தவர்களில் ஒருவர்…
தன் குருவின் மீது கொண்ட
அளவற்ற அன்பும்,
எல்லையற்ற பக்தியும் காரணமாக…
தன் பக்தர்கள் அன்புடன்
எழுதி வைத்திருந்த
தன்னுடைய வாழ்க்கை வரலாறையே…
தன் கையாலேயே
அழித்த ஒரு மகா ஞானி…

அவர் தான்…
வடகரை சிவானந்த பரமஹம்சர்…

 

1879-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி…
கார்த்திகை தீபத் திருநாளின்
புனிதமான ஒளி பரவிய நாளில்…
கேரள மாநிலத்தின்
வடகரை எனும் அமைதியான ஊரில்…
ஒரு சாதாரண குடும்பத்தில்
சிவானந்தர் பிறந்தார்.
அவரின் இயற்பெயர்… ராமன்.

அந்த பிறப்பே…
பின்னாளில் ஒரு அசாதாரண
ஆன்மீகப் பயணத்தின்
தொடக்கமாக அமைந்தது…

சிறு வயதிலேயே…
அவர் உள்ளத்தில்
வார்த்தைகளால் விளக்க முடியாத
ஒரு ஆழ்ந்த ஆன்மீக ஈர்ப்பு
மெதுவாக விதையாக
வேரூன்றத் தொடங்கியது…
விளையாட்டும்,
வயதிற்கே உரிய ஆசைகளும்
நிறைந்திருக்க வேண்டிய காலத்தில்…
அவர் மனம்
அமைதியையும்,
மௌனத்தையும்,
தேடலையும் நோக்கி
திரும்பிக் கொண்டிருந்தது…

அந்த உள் அழைப்பின் காரணமாக…
ஒன்பது வயதிலேயே
குடும்பத்தை விட்டு பிரிந்து…
கண்ணூர் சுவாமிகள் மடத்தை
அடைந்தார்…

ஆனால் வாழ்க்கை என்பது
ஒரே திசையில் மட்டும்
பயணிப்பதில்லை…
குடும்பத்தாரின் வற்புறுத்தலால்
மீண்டும் வீட்டிற்கு திரும்பிய அவர்…
தன் பள்ளிப்படிப்பை
முழுமையாக நிறைவு செய்து…
மலபாரில் இருந்த
ஒரு பள்ளியில்
களரி பயிற்சி ஆசிரியராக
பணியாற்றத் தொடங்கினார்…

அதன் பின்னர்…
சில காலம்
காவல்துறையிலும்
பணியாற்றினார்…
திருமண வாழ்க்கையும்
அமைந்தது…

வெளிப்பார்வைக்கு…
அவர் வாழ்க்கை
ஒரு சராசரி மனிதனின்
வாழ்க்கையைப் போலவே
தோன்றியது…
பணி, குடும்பம்,
சமூக பொறுப்புகள்…
எல்லாம் ஒழுங்காக
நடந்து கொண்டிருந்தன…

ஆனால்…
பல யோகிகளின் வாழ்க்கையில்
எதிர்பாராத ஒரு சம்பவம்…
ஒரே ஒரு நொடி…
அவரின்
முழு வாழ்க்கை திசையையும்
மாற்றிவிடும்  தருணm ஏற்பட்டிருக்கும்

அதேபோல்…
சிவானந்தரின் வாழ்க்கையிலும்…
அந்த மாற்றத்தின் நொடிகள்
மௌனமாக…
ஆனால் உறுதியாக…
அருகில் வந்து கொண்டிருந்தன…

ஏதோ ஒரு காரணத்தால்…
சிவானந்தரின் மனைவிக்கு
திடீரென
கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது…
ஒரு நாள்…
சிவானந்தரின் மடியில்
தலை வைத்தபடியே…
அவள் இந்த உலகை
விட்டு பிரிந்தாள்…

அந்த ஒரே தருணம்…
சிவானந்தரின்
உள்ளத்தைக் கிழித்துப் போட்டது…
அந்த இழப்பின்
ஆழத்தை அவர்
எளிதில் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை…

ஒரு நொடி முன் வரை…
என்னுடன் பேசிக்கொண்டிருந்தவள்…
என்னுடன் மூச்சு பகிர்ந்தவள்…
இப்போது இல்லை…

அவளுக்கு என்ன நடந்தது…?
இந்த உடலுக்குள்
இயங்கிக் கொண்டிருந்த உயிர்…
எங்கே போனது…?
அந்த உயிரை
எப்போதும்
இந்த உடலிலேயே
பிடித்து வைத்திருக்க
முடியாதா…?

உயிர் என்றால் என்ன…?
இந்த வாழ்க்கையின்
உண்மையான ரகசியம் என்ன…?
மரணம் என்பது…
எப்படி…
எதனால்…
நிகழ்கிறது…?

இந்தக் கேள்விகள்…
அவரை
விடாது துளைத்தெடுத்தன…
உறக்கத்திலும்…
மௌனத்திலும்…
அந்த கேள்விகளே
அவருடன் இருந்தன…

இந்த இயற்கையின்
ஆழமான இரகசியங்களை…
உணர்ந்து,
நேரடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
தீவிரமான தேடுதலோடு…
அந்த நொடியிலிருந்து…
சிவானந்தர்
வடகரையை விட்டு…
மௌனமான ஒரு
ஆன்மீகப் பயணத்தை
தொடங்கினார்…

 

தன்னுடைய ஆன்மீகத் தேடலுக்கு…
எங்காவது ஒரு இடத்தில்
ஒரு தெளிவான விடை கிடைக்கும் என்ற
உறுதியான நம்பிக்கையோடு…
சிவானந்தரின் பயணம்
ஒரே இடத்தில் நின்றுவிடவில்லை…
அவர் சென்றடைந்த இடங்கள் பல…
ஆனால் நோக்கம் ஒன்றே…
உண்மை.

அந்த தேடலின் ஒரு கட்டமாக…
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த…
நவீன மலையாள எழுத்தின் தந்தையாகக் கருதப்படும்
மாபெரும் ஞானி
துஞ்சத்து இராமானுச எழுத்தச்சன்
வாழ்ந்து தவமிருந்த மடத்தை
சிவானந்தர் அடைந்தார்…

அந்த மடத்தின் அமைதியில்…
அந்த மரபின் மௌனத்தில்…
பல நாட்கள்…
வார்த்தைகளில்லாமல்…
ஆழ்ந்த தியானத்தில்
அமர்ந்திருந்தார்…

அங்கேயும்…
தேடல் தொடர்ந்தது…
விடை இன்னும்
அவரை முழுமையாக
அடைந்ததாக
அவர் உணரவில்லை…

அதன் பின்னர்…
சித்தர்களின் புண்ணிய பூமி என
போற்றப்படும்
பழனியை நோக்கி
அவரின் பாதை
திரும்பியது…

பழனியில் உள்ள
பஞ்ச வர்ண குகை…
அவரின் ஆன்மீகப் பயணத்தில்
ஒரு முக்கியமான
தவநிலமாக
மாறியது…

அந்த குகையில்…
பல நாட்கள்…
பல இரவுகள்…
உலகச் சத்தங்கள் அனைத்தையும்
மறந்து…
உடல், மனம்,
எல்லாவற்றையும்
ஒரே புள்ளியில்
ஒருங்கிணைத்து…
ஆழ்ந்த தியானத்தில்
மூழ்கினார்…

அந்த காலகட்டத்தில்…
ஒரு நாள்…
அவரின் ஆன்மீக வாழ்வில்
மிக முக்கியமான
ஒரு அனுபவம் நிகழ்ந்ததாக…
சிவானந்தரே
பின்னாளில்
சில இடங்களில்
குறிப்பிட்டிருக்கிறார்…

அன்று…
போகர் மகாமுனியின்
திருக்காட்சியும்…
அதனுடன்
தீட்சையும்
அவருக்குக் கிடைத்ததாக
அவர் கூறுகிறார்…

அந்த தருணம்…
அவரின் தேடலுக்கு
ஒரு திசையை மட்டும் அல்ல…
ஒரு ஆழமான
உள் உறுதியையும்
வழங்கியதாக
அவரின் வாழ்க்கை
பின்னர் காட்டியது…

 

பதினெண் சித்தர்களில் ஒருவரான
சிவவாக்கியரின்
மறு அவதாரமே
சிவானந்தர் என்பதால்தான்…
போகர் மகாமுனி
அவருக்கு தீட்சை அளித்தார்
என்று சில ஆன்மீக மரபுச் செய்திகள்
கூறுகின்றன…

அந்த தீட்சை…
ஒரு சடங்காக மட்டும் அல்ல…
அவரின் வாழ்வையே
வேறு ஒரு நிலையிற்குக்
கொண்டு சென்ற
ஆழமான உள் மாற்றமாக
இருந்தது…

ஆனால் தீட்சை கிடைத்த பிறகும்…
சிவானந்தர்
குகையை விட்டு
வெளியே வரவில்லை…
அவர் தேடல்
அங்கு முடிவடையவில்லை…

நாட்கள் மாதங்களாக மாற…
அவர் அமர்ந்திருந்த
பஞ்ச வர்ண குகையைச் சுற்றி
புற்றுகளும்…
புதர்களும்…
மெதுவாக வளரத் தொடங்கின…
அந்த இடமே
காலத்தின் ஓட்டத்தில்
அவரை மறைத்து வைத்தது…

ஒரு நாள்…
அந்தப் பகுதியை ஆய்வு செய்வதற்காக
கலாம் என்ற பெயர் கொண்ட
ஒரு வனத்துறை அதிகாரி
அங்கு வந்தார்…

அப்போது…
அவர் கண்ட காட்சி
ஒரு சாதாரண காட்சி அல்ல…
புற்றுகளால் முற்றிலும்
மூடப்பட்ட நிலையில்…
குகையின் உள்ளே…
அசைவற்ற நிலையில்…
ஆழ்ந்த தியானத்தில்
சிவானந்தர் அமர்ந்திருந்தார்…

புற்றுகளை அகற்றி…
அவரை மெதுவாக
வெளியே கொண்டு வந்த போது…
சிவானந்தரின் வயது
தோராயமாக
31 ஆண்டுகள்…

அந்த நிகழ்வுக்குப் பின்னர்…
1910-ஆம் ஆண்டு
ஜனவரி மாதத்தில்…
சிவானந்தர்
தன்னுடைய
இமாலய யாத்திரையை
தொடங்கினார்…

அங்கே…
இமாலய மலைப்பகுதிகளில்
பல ஆண்டுகள்
வாழ்ந்து…
பல சித்த புருஷர்களை சந்தித்து…
ஆழமான ஆன்மீக அனுபவங்களோடு
தன் தேடலை
மேலும் ஆழப்படுத்தினார்…

அச்சமயங்களில் அவர் ஆழ்ந்த ஆன்மீக அனுபவங்களையும்…
பல சித்திகளையும்
கைவரப் பெற்றதாக
செய்திகள் கூறுகின்றன…

அந்த காலகட்டத்தில்…
ஒரு நாள்…
கர்நாடக மாநிலத்தில் உள்ள
ஸ்ரீ சாரதா பீடத்தை நோக்கி
செல்ல வேண்டும் என்ற
ஒரு ஆழ்ந்த உத்தரவு
சிவானந்தருக்கு கிடைத்தது…

அங்கு…
அதுவரை மிகுந்த பாதுகாப்போடு
பரம்பரையாக காக்கப்பட்டு வந்த
ஆதிசங்கரரின்
யோக தண்டம்,
ருத்ராட்சம் உள்ளிட்ட
நான்கு புனிதப் பொருட்களை
பெற்றுக் கொள்ள வேண்டும்
என்ற உள் அழைப்பே அது…

அதே நேரத்தில்…
அன்றைய சாரதா பீடத்தில்
32-ஆவது ஜகத்குரு சங்கராச்சாரியராக
விளங்கிய
நரசிம்ம பாரதி அவர்களுக்கும்…
ஒரு கனவு வந்தது…

“ஆதிசங்கரரின்
இந்த புனிதப் பொருட்களை
பெற்றுக் கொள்ளத் தகுதியான
ஒரு யோகி
சாரதா பீடம் வந்து சேருவார்…
அவரிடம்
இதுவரை பாதுகாத்து வந்த
இந்த பொருட்களை
ஒப்படைக்க வேண்டும்…”
என்ற உத்தரவு
அந்த கனவில் வழங்கப்பட்டது…

பின்னர்…
சிவானந்தர்
சாரதா பீடத்தை சென்றடைந்த போது…
அந்த தெய்வீக ஒற்றுமை
நிகழ்ந்தது…

ஆதிசங்கரரின்
யோக தண்டத்தையும்,
ருத்ராட்சத்தையும்
பெற்றுக் கொண்ட சிவானந்தருக்கு…
ஜகத்குரு நரசிம்ம பாரதி அவர்கள்
“சிவானந்த பரமஹம்சர்”
என்ற திருநாமத்தை
அன்றே சூட்டினார்…

அதன் பின்னர்
கேரளத்திற்கு திரும்பிய
சிவானந்தர்…
1923-ஆம் ஆண்டு…
பல சித்த ரகசியங்கள் அடங்கிய
“சித்த வேதம்”
என்ற முக்கியமான நூலை
எழுதியார்…

அதோடு மட்டுமல்ல…
சித்த வித்தை,
வாசி யோகம் போன்ற
பல அரிய யோகக் கலைகளையும்
மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்…

ஆன்மீகம் என்பது
தியானத்தோடு மட்டும்
நிறைவடையக் கூடாது…
அது சமுதாயத்தில்
மாற்றமாக வெளிப்பட வேண்டும்
என்று உறுதியாக நம்பியவர் அவர்…

அதனால்…
சாதி, ஏற்றத்தாழ்வுகள் மீது
கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்…

ஏழை, பணக்காரன்,
சாதி, பேதம்
எதையும் பார்க்காமல்…
அனைவரும் ஒன்றாக
வேலை செய்து…
ஒன்றாக அமர்ந்து
உணவு உண்ணும்
“சமபந்தி போஜனம்”
என்ற அமைப்பை…
1921-ஆம் ஆண்டிலேயே
அவர் நிறுவினார்…

அது…
அந்த கால சமூக அமைப்பில்
ஒரு துணிச்சலான
பெரும் மாற்றத்தின்
தொடக்கமாக இருந்தது…

இந்த இயக்கம்தான்…
பின்னாள்களில்
“சித்த சமாஜம்”
என்ற பெயரில்
ஒரு பெரிய சமூக இயக்கமாக
உருவெடுத்தது…

ஒரு ஆன்மீக ஞானியாக மட்டும் அல்ல…
ஒரு தீவிரமான
சமூக புரட்சியாளராகவும்
வாழ்ந்தவர் சிவானந்தர்…

அத்தகைய ஒரு புரட்சிகரமான சம்பவம்…
ஒருமுறை
வடகரையிலிருந்து
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
ஒரு தெப்பக்குளத்தில்
நிகழ்ந்தது…

அந்த ஒரே சம்பவம்…
சிவானந்தரின் பெயரை
தென் இந்தியா முழுவதும்
பரவச் செய்தது…

அந்தப் பகுதியில் இருந்த
லோபர்ணகாவு தெப்பக்குளம்…
உயர் சாதியினருக்கே உரியது…
தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள்
அந்தக் குளத்தில்
இறங்கவே கூடாது…
என்று…

அந்தப் பகுதியின்
தம்புரான் என அழைக்கப்பட்டவர்
கடுமையான ஆணை ஒன்றை
பிறப்பித்திருந்தார்…

குளத்தில்
நிறைய தண்ணீர் இருந்தும்…
இந்த ஆணையால்
தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மக்கள்
தண்ணீர் எடுக்க முடியாமல்…
தினந்தோறும்
அவமானமும்,
வேதனையும்
அனுபவித்து வந்தனர்…

இந்த அநீதியை அறிந்த
சிவானந்தர்…
ஒரு நாள்…
பாதிக்கப்பட்ட மக்களை
தன்னோடு அழைத்துக் கொண்டு…
அந்த தெப்பக்குளத்துக்கு சென்றார்…

அங்கே நின்றபடியே…
அவர்களை நோக்கி
உறுதியான குரலில்
“நீங்கள் கீழே இறங்கி
தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்…
தம்புரானின் ஆட்கள் வந்து
என்ன செய்தாலும்…
எந்த எதிர்ப்பும் காட்ட வேண்டாம்…” என்று கூறி 

அவர் படிக்கட்டில் நின்றபடியே…
அவர்களை ஒன்றன்பின் ஒன்றாக
குளத்துக்குள் இறங்கி
தண்ணீர் எடுக்கச் சொன்னார்…

இந்த செய்தி அறிந்ததும்…
தம்புரானின் ஆட்கள்
அங்கு வந்து
சிவானந்தரைத் தாக்கினர்…

ஆனால்…
அந்த தருணத்தில் நிகழ்ந்தது
ஒரு சாதாரண சம்பவம் அல்ல…

சிவானந்தராக்கு  மீது விழுந்த
ஒவ்வொரு அடியும்…
அவரை அடிக்க ஆள் அனுப்பிய
தம்புரான் மீதே
திரும்ப விழுந்தது…

அந்த வேதனையை
அவர் தன் உடலால்
நேரடியாக அனுபவித்தார்…

உண்மை புரிந்ததும்…
தன் தவறை உணர்ந்த தம்புரான்…
சிவானந்தரிடம்
தாழ்மையுடன்
மன்னிப்பு கேட்டுக் கொண்டார்…

இந்த ஒரே சம்பவம்…
சிவானந்தர்
ஒரு சாதாரண மனிதர் அல்ல…
அவர் ஒரு
அவதார புருஷர்
என்பதை
பலருக்கும் உணர்த்தியது…

இதன் பின்னர்…
கடவுள் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்கள் கூட…
சிவானந்தரின்
நேர்மை,
துணிச்சல்,
மனிதநேயத்தை
புகழ்ந்து பேசத் தொடங்கினர்…

1935-ஆம் ஆண்டு…
வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ள
கர்நாடகத்திலிருந்து வந்த
ஈ.வீ.ரா. பெரியார்…
சிவானந்தரைப் பற்றி கேட்டறிந்து…
மேடையிலேயே
ஒரு வார்த்தை சொன்னார்…

“நான் பெரியார் அல்ல…
சிவானந்தர்தான்
உண்மையான பெரியார்…”

அந்த வார்த்தை
அந்த காலகட்டத்தில்
ஒரு பெரிய அதிர்வாகவே இருந்தது…
அதுமட்டுமல்ல…
இந்த நிகழ்வை
பெரியார் நடத்திய
“விடுதலை” நாளிதழிலும்
தெளிவாக பதிவு செய்திருக்கிறார்…

—————————————–

ஒருமுறை…
ஈஸ்வர ஐயர் என்பவர்
சிவானந்தரை
தன் வீட்டிற்கு
உபன்யாசம் செய்ய
அழைத்திருந்தார்…

உபன்யாசம் நடைபெற்று கொண்டிருந்த போது…
அங்கே கூடியிருந்த
அனைவரின் பார்வையும்
சிவானந்தரின் மீது தான் இருந்தது…

ஆனால்…
சிவானந்தரின் பார்வை மட்டும்…
கூட்டத்தில் சற்று விலகி…
மௌனமாக நின்று…
அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த
ஒரு சிறுவனின் மீது
நிலைத்திருந்தது…

அந்த சிறுவனின் பெயரும்…
ராமன்…

உபன்யாசம் முடிந்ததும்…
ஈஸ்வர ஐயரை அழைத்த சிவானந்தர்…
“இந்த சிறுவன்…
ஒரு நாள்
இந்த தேசம் போற்றும்
ஒரு மாபெரும் துறவியாக
மாறுவான்…”
என்று அமைதியாகச் சொன்னார்…

பின்னர்…
அந்த சிறுவனை அருகில் அழைத்து…
அவனுக்கு
தீட்சையும்…
உபதேசமும்
வழங்கினார்…

அந்தச் சிறுவன் தான்…
பின்னாளில்
“பகவான் நித்தியானந்தா”
என்று போற்றப்படும்
ஒரு மிக உயர்ந்த ஞானி…

மற்றொரு சம்பவம்…
ஒருமுறை
சிவானந்தர்
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது…
ஒரு மனிதர் திடீரென வந்து…
அவர் கால்களில் விழுந்து…

பல ஆண்டுகளாக
யானைக்கால் நோயால்
தான் அவதிப்பட்டு வருவதாக…
தன்னை காப்பாற்றுமாறு
மனமுருக மன்றாடினார்…

சிவானந்தர்…
அந்த மனிதனை
ஒரு கணம் பார்த்தார்…
பின்னர்…
சாலையிலிருந்த
சிறிது மண்ணை எடுத்துக் கொண்டு…
அதில் ஒரு பகுதியை
அவரின் வாயில் போட்டு
விழுங்கச் சொல்லி…
மீதியை
நோயால் பாதிக்கப்பட்ட
அவரின் காலில்
தூவி விட்டார்…

அதன்பின்…
எதுவும் பேசாமல்…
சிறிது சிரித்தபடியே
அந்த இடத்தை விட்டு
நகர்ந்து சென்றார்…

சில நாட்களிலேயே…
அந்த மனிதரின்
யானைக்கால் நோயின்
அடையாளமே
தெரியாமல் போனது…

அந்த மனிதர் தான்…
பின்னாளில்
சிவானந்தரின்
தீவிர பக்தராக விளங்கிய
சுவாமி சரநாணந்தா…



1937-ஆம் ஆண்டு…
தன் பக்தர்களின்
உள்ளார்ந்த அழைப்பை ஏற்று…
சிவானந்தர்
மலேசியாவின்
கோலாலம்பூரை நோக்கி
பயணம் செய்தார்…

அங்கு…
ஆன்மீகம்
வார்த்தைகளாக அல்ல,
வாழ்வாக மாற வேண்டும் என்ற
நோக்கத்துடன்…
“சித்த வைத்திய சங்கம்”
என்ற அமைப்பை
நிறுவினார்…

அந்த சங்கம்…
சித்த மருத்துவம்,
ஆன்மீக அறிவு,
மனித நலன்…
இந்த மூன்றையும்
ஒரே பாதையில்
இணைக்க முயன்ற
ஒரு முயற்சியாக
அமைந்தது…

அதன் பின்னர்…
கேரளமும்…
தமிழகமும் சேர்த்து…
மொத்தமாக
ஐந்து
“சித்த சமாஜங்கள்”
உருவாக
அவர் காரணமானார்…

சிவானந்தர்…
ஒரு ஞானியாக மட்டுமல்ல…
சமுதாயத்தை
உள்ளிருந்து மாற்ற வேண்டும் என்று
நம்பிய
ஒரு சமூக புரட்சியாளராகவும்
வாழ்ந்தவர

1949-ஆம் ஆண்டு…
ஜூன் 23-ஆம் தேதி…

பழனியில்…
தண்டாயுதபாணி கோவிலின்
புனிதமான கிரிவல பாதையில் அமைந்த
தன் இல்லத்தில்…
சிவானந்தர்…

தன் உடல் பயணம்
இந்த உலகில்
நிறைவடைந்துவிட்டதை
முழுமையாக உணர்ந்து…
அமைதியாக…
எந்த கலக்கமும் இல்லாமல்…

தன் பூத உடலைத் துறந்து…
மகா சமாதி அடைந்தார்…

அது ஒரு மரணம் அல்ல…
ஒரு ஞானியின் பார்வையில்…
அது ஒரு
இணைவு…
ஒரு நிலைமாற்றம்…
ஒரு மௌனப் பூர்த்தி…

அதன் பின்னர்…
அந்த மகானின்
பூத உடல்
அவர் பிறந்த மண்ணான
வடகரைக்கு கொண்டு வரப்பட்டு…
அங்கு
சமாதிக் கோவில்
கட்டப்பட்டது…

இன்றைக்கும்…
அந்த சமாதி…
ஒரு நினைவுச் சின்னமாக அல்ல…
அமைதியையும்…
உள் தேடலையும்…
மனித மரியாதையையும்
நினைவூட்டும்
ஒரு உயிருள்ள இடமாக
நின்றுகொண்டிருக்கிறது…

 

அவர் நடந்த பாதையில்…
கண்ணுக்குத் தெரியும்
அடையாளங்கள் அதிகம் இல்லை…
சிலைகள் இல்லை…
பெரும் விழாக்கள் இல்லை…
அவரை நினைவூட்ட
ஒலிக்கும் சத்தங்களும் இல்லை…

ஆனால்…
அந்த மௌனமான பாதை…
இன்றைக்கும்
பல மனிதர்களின்
உள்ளார்ந்த வாழ்க்கையை
மெல்ல ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது…

உடல் மறைந்துவிட்டது…
ஆனால் அவர் விதைத்த
கருத்துகளும்…
மனிதநேயமும்…
ஆன்மீக நேர்மையும்…
இன்றைக்கும்
விதைகளாக
மண்ணுக்குள் உயிருடன் இருக்கின்றன…

காலம் செல்லச் செல்ல…
அவை
மௌனமாக
முளைக்கின்றன…
யாரும் கவனிக்காமல்…
ஆனால் ஆழமாக…

“யாம்
ஐந்து கண்டங்களில்
விதை விதைத்திருக்கிறோம்…
முளைப்பவை
முளைகட்டும்…”

இந்த வார்த்தைகள்…
ஒரு அறிவிப்பாக அல்ல…
ஒரு நம்பிக்கையாக…
ஒரு உறுதியாக…
இன்றைக்கும்
அவரை பின்பற்றும்
சாதகர்களின் உள்ளங்களில்
மௌனமாக
ஒலித்துக்கொண்டே
தான் இருக்கின்றன…

(… )



Adiguru

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

🧘 Siddhas & Yogis

Sri Seshadri Swamigal- ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

தமிழில் வாசிக்க கீழே செல்லவும்  Sri Seshadri Swamigal – The Saint Once Called Mad, Later Revered by the World Was He
🧘 Siddhas & Yogis

We believe Apple Will announce iPhone.

பகவான் ரமணர் அற்புதங்கள்!   மகான்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ,    தனக்கென வரையறைகள் வகுத்து கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் வாழாமல்    ஒரு மனிதனின்